"நான் ஒன் மேன் ஆர்மி" ; கொலை செய்துவிடுவேன் என போலீசாரையே மிரட்டிய ரௌடி
தான் "ஒன் மேன் ஆர்மி" என்றும் "கேஸ் டேங்கர் லாரியுடன் புகுந்தால் 500 பேரை கொன்றுவிடுவேன்" என்றும் ஆடியோ வெளியிட்டு போலீசாரையே மிரட்டிய நெல்லை மாவட்ட ரௌடியை சென்னையில் வைத்து துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவன் “கோழி அருள்” என்கிற அருள்ராஜ். கொலை, கொள்ளை, வழிப்பறி என சுமார் 23க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் காவல்துறையின் சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவன் இந்த கோழி அருள்ராஜ். அண்மையில் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோழி அருள் காவல்துறையை எச்சரிக்கும் வகையில் சில ஆடியோக்களை வெளியிட்டுள்ளான். அதில் ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் ஏரியாவுக்கு 50 ரௌடிகளை இறக்குவேன் என்றும் அவர்களில் 30 பேர் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் குறைந்தது 100 பேரையாவது கொன்றுவிடுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தான் கோழி அருள்.
போலீசாரைக் கொல்ல கேஸ் டேங்கர் லாரியையோ, ஆசிட் டேங்கர் லாரியையோ எடுத்துக் கொண்டு தான் ஒன் மேன் ஆர்மியாகக் களமிறங்குவேன் என்றும் 500 பேரையாவது கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தான் கோழி அருள்.தன்னை எத்தனை போலீசார் வந்தாலும் பிடிக்க முடியாது என்றும் சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடியது போல தேட வேண்டி இருக்கும் என்றும் கோழி அருள் தனது ஆடியோவில் மிரட்டி கலகலப்பூட்டியிருந்தான்.
கோழி அருளின் இந்த ஆடியோ காட்டுத்தீயாய் சமூக வலைதளங்களில் பரவ, களத்தில் இறங்கிய போலீசார், அவன் பேசிய செல்போன் ஏண்ணை வைத்து டிராக் செய்யத் தொடங்கினர். அந்த எண்ணின் சிக்னல் சென்னை அம்பத்தூர் பகுதியை அடையாளம் காட்டவே, அம்பத்தூர் பகுதி போலீசாரும் வேட்டையில் இறங்கினர். இறுதியாக அத்திப்பட்டு பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கோழி அருளை துப்பாக்கி முனையில் கொத்தாகத் தூக்கினர்.
போலீசாரையே மிரட்டும் அளவுக்கு வளர்ந்துள்ள இதுபோன்ற ரௌடிகள் சாதாரண மக்களோடு மக்களாக உலவுவது எப்படி எனக் கேட்கும் சமூக ஆர்வலர்கள், கூடையில் அடைத்து வைக்கும் கோழிகளை அவ்வப்போது வெளியில் திறந்துவிடுவது போல் அல்லாமல் கோழி அருள் போன்றவர்கள் முற்றாக திருந்தும் வரை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Comments